பட்ஜெட்டில் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி நிதி ஒதுக்கீடு - உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு
பட்ஜெட்டில் தொழில் துறைக்கு ரூ.27,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வரவேற்று உள்ளது.
மதுரை,
மத்திய அரசின் இந்தாண்டிற்கான பட்ஜெட்(நிதிநிலை) வெளியிடப்பட்டது. இதில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு என்றும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை 10 சதவீதம் வரி என 6 கட்டங்களாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வரி சுமையை குறைத்தாலும், ஏற்கனவே இருந்தது போல 3 கட்டங்களாக இருந்தால் வரி கணக்கிடுவதற்கு எளிமையாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்களை விட வரி செலுத்துபவர்கள் அதிகரித்திருப்பார்கள். விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக்க மத்திய அரசு உறுதி அளித்ததை வரவேற்கிறோம்.
வேளாண்மை சந்தை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சி, தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்துவது, 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைக்க உதவுவது, விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு, 2021-க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு ஆகியவற்றை வரவேற்கிறோம்.
இந்தியாவில் செல்போன் உற்பத்தியை ஊக்கப்படுத்தி திட்டம், வர்த்தகம், தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி நிதி ஒதுக்கீடு, அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்க திட்டம், சென்னை-பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, 2024-க்குள் 100 புதிய விமான நிலையங்கள் உருவாக்குதல், ரூ.5 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு எந்தவித தணிக்கையும் இல்லை என்று பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.