கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.

Update: 2020-02-01 23:00 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கிரண்குராலா திடீரென வந்தார். தொடர்ந்து அவர், பிரசவ வார்டு, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சை பகுதி, அறுவை சிகிச்சைகள் பகுதி, டயாலிசிஸ் பிரிவு, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி ஆகிய பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

புதிய கட்டிட பணி

அப்போது ஒவ்வொரு பிரிவுகளிலும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கான கருவிகள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயன்பாடின்றி இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்த்து, இயங்காதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வருகிற புதிய கட்டிட பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர் கிரண்குராலா, பணிகளை தரமாக முடிக்குமாறு அங்கிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்