தமிழகத்தில் ரூ.83 கோடியில் 240 புதிய பஸ்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
தமிழகத்தில் ரூ.83¾ கோடியில் புதிதாக 240 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகராட்சி வடக்கு காளியம்மன் கோவில் முதல் கிழக்கு கோவிந்தாபுரம், ராமநாதபுரம் வரை புதிதாக தார்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதையடுத்து திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழனி-விழுப்புரம், பழனி-நெய்வேலி, மதுரை-சேலம் ஆகிய வழித்தடங்களில் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 அரசு பஸ்களை, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், தமிழக மக்களின் நலன்கருதி, பிற மாநிலங்களை விட குறைவாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே புதிய பஸ்களை வாங்கி இயக்கும்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.83 கோடியே 83 லட்சம் மதிப்பில் 240 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மதுரை கோட்டத்துக்கு 5 புதிய பஸ்கள் கிடைத்தன. அதில் 3 பஸ்கள் திண்டுக்கல்லுக்கு பெறப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுலா தலங்கள், மலைக்கிராமங்களுக்கு ஏற்கனவே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நாராயணசாமி, செயலாளர் சங்கர் பிரகாஷ், பொருளாளர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.