குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ; ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடந்துள்ள குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-02-01 22:15 GMT
நாகர்கோவில், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையோடு பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். அப்போது பேசிய ஜனாதிபதியின் கூற்றை நாம் ஏற்க முடியாது. காந்தியின் கனவைத்தான் நாங்கள் நனவாக்கி உள்ளோம். காந்தி சொன்ன அடிப்படையில் தான் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த கூற்று காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்கு சமம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அசாமில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென அவர்கள் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு வருகிற போது தான் எதிர்க்கப்படுகிறது. இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்த சில கட்சிகளும், அரசுகளும் தற்போது இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளன. பீகார் போன்ற 14 மாநில அரசுகள், இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளார்கள். அ.தி.மு.க. அரசும் தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்தக்கூடாது, நடத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிப்ரவரி 2-ந் தேதி (அதாவது இன்று) முதல் ஒரு வாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெல் கொள்முதல் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அரசாங்கம் நெல் கொள்முதலுக்கு கொடுக்கும் விலை, நல்ல ரக நெல்லுக்கு ஒரு கிலோ ரூபாய் 19.50 கொடுக்கிறார்கள். மோட்டா ரக நெல்லுக்கு 18 ரூபாய் 65 பைசா கொடுக்கிறார்கள். ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,550 ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது. எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

பிரமாண்டமான ஊழலாக இருப்பதால் குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்துகிறது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு குழந்தைகள் மத்தியில் அச்சத்தை, பீதியை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் ஆபத்தானது. கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். அத்தியாவசிய உணவுப்பொருள் சட்டம், மருந்து விலை கட்டுப்பாட்டு சட்டம், இந்திய உணவுக்கழக சட்டம் தேவையில்லை என்று அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அறிவித்துள்ளது. இன்று இந்தியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம், 40 ஆண்டுகளில் இல்லாத மக்களின் வாங்கும் சக்தி குறைவு அதிகரித்துள்ளது. சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை இல்லை.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, மாநிலக்குழு உறுப்பினர் லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெல்லார்மின், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் உசேன், தங்கமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்