திருச்செந்தூரில் பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

திருச்செந்தூரில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-02-01 23:45 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று அதிகாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆணும், 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் விஷம் குடித்து, வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களின் அருகில் விஷ மருந்து பாட்டிலும் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கணேசமுத்து (வயது 45), சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி ஜெயலட்சுமி (35) என்பது தெரியவந்தது.

கணேசமுத்து சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜெயலட்சுமியும் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணேசமுத்துவும், ஜெயலட்சுமியும் சமையல் வேலைக்கு ஒன்றாக சென்று வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த அவர்களுடைய குடும்பத்தினர், 2 பேரையும் கண்டித்தனர். ஆனாலும் கணேசமுத்து, ஜெயலட்சுமி தங்களது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்தனர்.

இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணேசமுத்துவை அவருடைய அண்ணன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கணேசமுத்து தன்னுடைய கள்ளக்காதலி ஜெயலட்சுமியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு ஜெயலட்சுமியும் சம்மதித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவில் கணேசமுத்து, ஜெயலட்சுமி ஆகிய 2 பேரும் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கணேசமுத்து, ஜெயலட்சுமி ஆகியோரின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்