வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ரூ.1000 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
கோவையில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1000 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.;
கோவை,
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 650 வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் பண பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலக வளாகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.இதை இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராஜவேலு தொடங்கி வைத்து பேசியதாவது:-
நமது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் அடுத்த மாதம் (மார்ச்) 11,12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடைபெறும். எனவே மத்திய அரசு உடனடியாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-
நேற்று 2-வது நாளாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஏராளமான வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செயல்பட வில்லை. ரூ.1000 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
கோவை மாநகரில் 200 ஏ.டி.எம்.களும், புறநகர் பகுதியில் 100 ஏ.டி.எம். களும் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் நிரப்பப்பட்ட பணம் காலியாகி விட்டது. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். நாளை (அதாவது இன்று) வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் 3-ந் தேதி முதல் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள நாள் ஆகும். இதனால் பலரும் சம்பள பணத்தை எடுக்க ஏ.டி.எம்.களுக்கு சென்றனர். இதனால் ஏ.டி.எம்.களில் நிரப்பப்பட்டிருந்த பணம் சீக்கிரம் தீர்ந்தது. இதையடுத்து அந்த ஏ.டி.எம்.களில் பணம் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.