கோவையில் பரபரப்பு: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.33 கோடி மோசடி - மேலாளர் உள்பட 4 பேர் கைது
போலி ஆவணங்கள் மூலம், வங்கியில் ரூ.33 கோடி கடன் கொடுத்து மோசடி செய்த மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
கோவை,
கோவை-திருச்சி ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உள்ளது. இந்த வங்கியின் உதவி பொதுமேலாளர் லட்சுமி பிரகாஷ், கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-
எங்களது வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 55). தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரை சேர்ந்த இவர் உள்பட 4 பேர் சேர்ந்து வங்கியில் ரூ.33 கோடி மோசடி செய்தது 2018-19-ம் ஆண்டு தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து துணை கமிஷனர் உமா உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சவுந்தர்ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜமுனா, ரேணுகாதேவி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதில், வங்கி மேலாளர் உள்பட 4 பேர் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சூலூர் அருகே உள்ள செலக்கரிசலை சேர்ந்தவர் கோமதி (42). இவருக்கு சொந்தமான மில் உள்ளது. மேலும் அவர் கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறார். கோமதி, கோழிப்பண்ணையை விரிவுபடுத்தவும், புதிதாக கோழிப்பண்ணை அமைக்கவும் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தார்.
இதற்கிடையே கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த புரோக்கர் மகேஷ் (41) கடன் பெற்றுத்தருவதாக கோமதியை வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியத்திடம் அழைத்துச்சென்றார். வங்கியால் நியமிக்கப்பட்ட நிலம் மற்றும் கட்டிடங்களை மதிப்பீடு செய்யும் சூலூரை சேர்ந்த என்ஜினீயர் பாண்டியன்(54) என்பவரை சந்திக்குமாறு வங்கி மேலாளர் கூறினார். அவரையும் கோமதி சந்தித்தார்.
பின்னர் அவர்கள் 4 பேரும் கூட்டுசேர்ந்து கடன் வாங்கி மோசடி செய்ய திட்டமிட்டனர். எவ்வளவு கடன் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று வங்கி மேலாளர் கூறினார்.
இதையடுத்து சூலூர், கரடிவாவி உள்ளிட்ட இடங்களில் கோழிப்பண்ணை அமைக்க உள்ள நிலத்தின் மதிப்பை உயர்த்தி காட்டியும், கோழிப்பண்ணை அமைக்காமலே, கோழிப்பண்ணை இருப்பது போலவும், இதற்கான கட்டிடங்கள் இருப்பதுபோலவும் போலி ஆவணங்களை காண்பித்து மொத்தம் ரூ.33 கோடி கடன் பெற்றனர்.
வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததுடன், போலி ஆவணங்களை அசல் ஆவணங்களாக ஏற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் கடன் வழங்கி, கமிஷன் வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடன் வாங்கியவர்கள் நீண்டகாலமாக கடன் தொகையை செலுத்தாததால் வங்கி உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, கடன் கணக்கை தணிக்கை செய்தபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியை தொடர்ந்து வங்கி நிர்வாகம், மேலாளர் சிவசுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்தது.
கூட்டுசதி, மோசடி, போலி ஆவணங்களை அசல் ஆவணங்கள் போல் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம், கோமதி, மகேஷ், பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான வங்கி மேலாளர் சிவசுப்பிரமணியம் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. இந்த மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியில் ரூ.33 கோடி கடன் வழங்கி மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.