ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை - முகமூடி கும்பல் அட்டகாசம்

ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தம்பதிைய தாக்கி நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-01 22:45 GMT
அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கலா. நேற்று முன்தினம் சீனிவாசன் ஒடுகத்தூரில் நடந்த வாரச்சந்தையில் அவருக்கு சொந்தமான 7 ஆடுகளை விற்பனை செய்தார். இதன் மூலம் 70 ஆயிரம் கிடைத்தது. அதனை வீட்டிற்கு கொண்டு வந்தார்.

இரவு கணவன் - மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் முகமூடி கும்பல் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளனர். இதனையடுத்து பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு சீனிவாசனும், கலாவும் கண்விழித்தனர். அப்போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பலை கண்டதும் அதிர்ச்சி அடைந்து தம்பதியினர் கூச்சலிட முயன்றனர். அதற்குள் அவர்கள், தம்பதியை சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேரும் மயங்கினர்.

இதனையடுத்து முகமூடி கும்பல் கலா அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 3 பவுன் நகைகள் மற்றும் ஆடு விற்பனை செய்து வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

நேற்று காலையில் சீனிவாசன் வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தம்பதியினர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து ெசன்ற முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்