கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு ஓய்வு; 2 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஓய்வு பெற்றனர்

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு மற்றும் 2 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளும் நேற்று ஓய்வு பெற்றனர்.

Update: 2020-02-01 00:23 GMT
பெங்களூரு, 

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் நீலமணி ராஜு. இவர், கடந்த 2½ ஆண்டுக்கும் மேலாக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்றுடன் நீலமணி ராஜு ஓய்வு பெற்றார். இதுபோல, கர்நாடக மாநில தீயணைப்பு துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த எம்.என்.ரெட்டி, போலீஸ் வீட்டு வசதித்துறை டி.ஜி.பி.யாக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் ஆகிய 2 பேரும் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இதையடுத்து, பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை செயலாளர் ரஜனிஷ் கோயல் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ேபாலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஓய்வுபெற்ற 3 பேருக்கும் கர்நாடக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நீலமணி ராஜு பேசியதாவது:-

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக 2½ ஆண்டுக்கும் மேலாக பணியாற்றினேன். இந்த கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் சாதாரண போலீஸ்காரர் முதல் உயர் பதவி வகித்த போலீஸ் அதிகாரிகள் வரை அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக தான் சிறப்பாக செயல்பட முடிந்தது. மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதனை சமாளிக்க முடிந்தது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடுடன் இருந்தது. பெரிய அளவிலான வன்முறைகள், கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தல்களில் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல், அமைதியான முறையில் நடந்திருந்தது. போலீசாரின் சம்பள பிரச்சினை தொடர்பான ராகவேந்திரா அவுராத்கரின் அறிக்கையை கர்நாடக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. சில முரண்பாடுகள் இருந்தாலும், அதனை அரசு ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 30 ஆண்டுக்கும் மேலாக போலீஸ் துறையில் பணியாற்றி உள்ளேன். முழு மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். மாநில மக்களுக்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து போலீசாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்