பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
புதுவையில் பால் தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யுமாறு பாண்லே நிர்வாகத்துக்கு நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லே மூலம் நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் 50 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே புதுவையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மீதி பால் வெளிமாநிலங்களில் இருந்து தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக உள்ளூரிலும் பால் உற்பத்தி குறைந்துள்ளது. வெளிமாநில சப்ளையர்களும் பால் சப்ளையை குறைத்துவிட்டனர்.
வழக்கமாக பாண்லே மூலம் காலையில் 50 முதல் 55 ஆயிரம் லிட்டரும், மாலையில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டர் வரை பால் வினியோகம் செய்யப்படும். ஆனால் நேற்று காலையில் 45 ஆயிரம் லிட்டரும், மதியம் 20 ஆயிரம் லிட்டரும் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக விற்பனை முகவர்களுக்கு பால் பாதி அளவுக்கே சப்ளை செய்யப்பட்டது.
இதனால் பால் வந்தவுடனேயே விற்று தீர்ந்தது. பலர் பாண்லே பால் பாக்கெட் கிடைக்காமல் அவதியடைந்தனர். தனியார் பால் பாக்கெட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பாண்லே மேலாண் இயக்குனர் சாரங்கபாணி மற்றும் அதிகாரிகளுடன் பால் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக மாநில பால் கூட்டுறவு சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகளவில் பால் கொள்முதல் செய்யவும், உடனடியாக பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். மேலும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். இதன் மூலமாக ஓரிரு தினங்களில் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பால் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.