பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டம்: புதுச்சேரிக்கு 3-வது இடம்
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
புதுச்சேரி,
பெண்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எடை குறைந்த குழந்தைகள் பிரசவிப்பதை தடுக்கவும், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலமாக ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்கிற திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் (முதல் குழந்தைக்கு) ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கி அல்லது அஞ்சலக கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டு தாய்மார்கள் வாரம் கொண்டாடப்பட்டது. இந்த திட்டத்தினை ஆரம்ப நாட்களில் இருந்து சிறப்பாக அமல்படுத்திய அனைத்து மாநிலங்களுக்கான தேர்வில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த பெருமையை பெற்றுத்தந்த துறையின் அமைச்சர் கந்தசாமி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.