தஞ்சை மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2020-01-31 22:15 GMT
தஞ்சாவூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட வங்கித்துறையை சேர்ந்த 9 தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் 350 வங்கி கிளைகளில் பணியாற்றும் 3,200 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தஞ்சை ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை முன்பு நேற்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், 20 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். பணி ஓய்வு பணப்பயன்களில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குருநாதன், அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்க துணை பொதுச் செயலாளர் சத்யசீலன், அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி மோகனசுந்தரம், இந்தியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக ரூ.300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இன்றும்(சனிக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்