பரமக்குடி அருகே நள்ளிரவில் பரிதாபம்: வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி - இடிபாடுகளுக்குள் புதைந்த தாய் மீட்பு

நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களுடைய தாயார் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-01-31 23:30 GMT
பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சென்னையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு ஜெகதீசுவரன்(10), விகாஷ்(8) ஆகிய 2 மகன்கள். இவர்கள் இருவரும் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரேகா தனது 2 மகன்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து மொத்தமாக வந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிருக்கு போராடினர்.

வீடு இடிந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதே போல் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் மீட்பு பணியில் இறங்கினர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு ஜெகதீசுவரன், விகாஷ் ஆகிய இருவரையும் பிணமாகவே மீட்க முடிந்தது. அவர்களுடைய தாயார் ரேகா, படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பலியான சிறுவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து எமனேசுவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், அந்த வீட்டின் கூரை மிகவும் பழுதடைந்து இருந்ததால் இடிந்து விழுந்து இருக்கலாம் என தெரியவருகிறது.

மேலும் இதுதொடர்பாக பரமக்குடி தாசில்தார் விஜயகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்