தாய்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் கீரி, எலி பறிமுதல் திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பாலைவன கீரி, எலி, தவளை, சிலந்தி, பச்சோந்தி, ஒணான் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

Update: 2020-01-31 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்து இறங்கிய சென்னையை சேர்ந்த இப்ராகிம் ஷா(38) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டு இருந்தார்.

இதையடுத்து, அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் 2 பிளாஸ்டிக் பெட்டிகள் இருந்தன.

அவற்றை பிரித்து பார்த்தபோது, ஆப்பிரிக்காவில் வாழும் 1 பச்சோந்தி, 5 சிலந்திகள், 1 தவளை, 1 எலி, மெக்சிகோ நாட்டில் வாழும் 1 ஓணான், சகாரா பாலைவனத்தில் வாழும் 4 கொழுப்பு வால் எலி, 2 பாலைவன கீரி உள்ளிட்ட வன உயிரினங்கள் இருந்தது தெரியவந்தது. உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவற்றை யாருக்காக? எதற்காக? கடத்தி வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு இப்ராகிம் ஷா இவை தனக்கு சொந்தமானது இல்லை என்றும், தாய்லாந்து விமான நிலையத்தில் ஒருவர் இந்த பெட்டிகளை தன்னிடம் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் ஒருவர் வந்து பெற்றுக் கொள்வார் என்று கூறினார்.

பின்னர் இப்ராகிம் ஷாவை விமான நிலையத்தின் வெளியே அழைத்து வந்த அதிகாரிகள் யாராவது வன உயிரினங்களை பெறுவதற்கு வருகிறார்களா? என்று கண்காணித்தனர். ஆனால் வாங்குவதற்கு யாரும் வரவில்லை.

அதன் பின்னர், வண்டலூர் உயிரியல் பூங்கா டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு வன உயிரினங்களை பரிசோதனை செய்தனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் ஆரோக்கியமாக உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பிற நாடுகளில் இருந்து வன உயிரினங்களை கொண்டு வர நேர்ந்தால், உரிய மருத்துவபரிசோதனை செய்து தான் எடுத்து வர வேண்டும். இதையடுத்து பறிமுதல் செய்த எலி, தவளை, கீரி, பச்சோந்தி, ஒணான் ஆகியவற்றை அதிகாரிகள் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இப்ராகீம் ஷாவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்குள் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வனஉயிரினங்களை கடத்தி வருவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்