தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
2021-ம் ஆண்டில் நாம் ஆட்சியில் அமரும் வகையில் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டு பந்தலில் அவர்கள் அமர்வதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கட்சி சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காட்டி அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்தனர்.
தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு மேடைக்கு வந்ததும் மேடையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. குத்துவிளக்கேற்றி மாநாட்டை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிலர் மாவட்ட வாரியாக பேசினார்கள். அதன் பின்னர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டு மக்களும், ஊர் மக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எடுத்து சொல்வதற்கான மாநாடு இது.
இந்த மாநாட்டில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர்கள் 12 பேர், உறுப்பினர்கள் 243 பேர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் 122 பேர், ஒன்றிய கவுன்சிலர்கள் 2,113 பேர், ஊராட்சி மன்ற தலைவர்கள் 4,032 பேர் மற்றும் நேற்று நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நம்முடன் பணியாற்றுவதற்காக இணைந்த சுயேச்சைகள் என மொத்தம் 6,679 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தீரர்கள் நிறைந்த கோட்டம், திருப்பு முனை மாநாடுகள் கண்ட மாவட்டம் என்ற பெருமைகள் திருச்சிக்கு உண்டு. மலைக்கோட்டையை கழக கோட்டையாக முதன்மை செயலாளர் நேரு மாற்றிக்காட்டி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று தான் நேருவிடம் கூறினேன். ஆனால் அவர் ஒரு மாநாட்டையே நடத்தி தனது வேகத்தை காட்டி இருக்கிறார். தலைமை கழகத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு வேலையை 100 மடங்கு செய் என்றால் நேரு அதனை 300 மடங்கு செய்யக்கூடியவர்.
அவரது பணி திருச்சி மாவட்டத்தோடு நின்று விடக்கூடாது, தமிழகம் முழுவதும் தொடரவேண்டும் என்பதற்காக தான் அவருக்கு முதன்மை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி மட்டும் அல்ல. கழகத்தின் மையப்பகுதியும் கூட. 1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் தான் தலைவர் கலைஞர் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்படி திருச்சி தொடர்பான பல வரலாற்று சம்பவங்களை எடுத்து கூற முடியும்.
நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல. அசாதாரணமான, மகத்தான வெற்றியாகும். ஆளும் கட்சியின் அதிகாரபலம், பணபலம், போலீஸ் பலம் ஆகிய இவற்றை எல்லாம் எதிர்த்து வெற்றி பெற்று இருக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் அக்கிரமங்களை எல்லாம் மீறி வெற்றி பெற்றதால் தான் மகத்தான வெற்றி என குறிப்பிட்டேன். உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றிபெறும். ஆனால் இந்த முறை தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று அந்த வரலாற்றை மாற்றி இருக்கிறது.
இதற்கு என்ன காரணம்? ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம்- வெறுப்பு, நம் மீது வைத்துள்ள நம்பிக்கை. நமது பிரச்சினை, கவலைகளை எல்லாம் தி.மு.க.வால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்று மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை உள்ளாட்சி பிரதிநிதிகள் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு என்றால் எனக்கு எப்போதுமே அதிக மகிழ்ச்சி தான். ஏனென்றால் நானும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து வந்தவன் தான். சென்னை மாநகராட்சி தேர்தலில் இரண்டு முறை மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல இடங்களில் பாலங்கள் கட்டினேன். காலை முதல் இரவு வரை நடந்தே சென்று மக்களை நேரடியாக சந்தித்து சிறப்பாக பணியாற்றினேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்பு கிறேன். உங்கள் பணியானது நமக்கு வாக்களித்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தாத வகையிலும், வாக்களிக்காத மக்களுக்கு நாம் இவருக்கு வாக்களிக்காமல் தவறு செய்து விட்டோமே என்று வருத்தப்படும் அளவில் உங்களது பணி இருக்கவேண்டும். மக்கள் சொல்வதை செய்கிறோமோ இல்லையோ? அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். மக்கள் பணியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றிக்காட்ட முடியும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கையேட்டில் உள்ள விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களையும் பேச வையுங்கள். உள்ளூர் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் மீது உடனே நடவடிக்கை எடுங்கள்.
பஞ்சாயத்து தலைவர்களுக்கு ‘செக்’கில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது என்று துரைமுருகன் குறிப்பிட்டார். இது தொடர்பாக நாங்கள் புகார் செய்து இருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் எடுத்து சொல்வோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். எந்த பிரச்சினை என்றாலும் நேரடியாக சென்று ஆய்வு செய்யுங்கள்.
பெண்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வாய்க்கால், கண்மாய் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பொது கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு முக்கிய சாலை சந்திப்புகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.
டெண்டர் விடுவதில் தான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கும், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுத்து விடாதீர்கள். வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அடுத்து நான் (ஸ்டாலின்) தான் முதல் -அமைச்சர் என்றெல்லாம் இங்கே பேசினார்கள். நீங்கள் சிறப்பாக மக்கள் பணியாற்றினால் தான் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர முடியும். எனவே அமைதியாக நடந்து தி.மு.க.வுக்கு ஒரு நற்பெயரை ஈட்டித்தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆளும் கட்சியினர் உங்களை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். உனக்கு பாதி எனக்கு பாதி என கூறி உங்களை மாட்டி விட பார்ப்பார்கள். எனவே ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். கட்சி தலைமைக்கும், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வர போகிறது.
அந்த தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கிறேன். நாளை மலர இருக்கும் ஆட்சி உங்கள் கையில் தான் இருக்கிறது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
மாநாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வெள்ளி செங்கோலை கே.என்.நேரு எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், அண்ணா, கருணாநிதி மீது ஆணையாக இந்த மாநாட்டில் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி, உறுதிமொழி படிவத்தை படித்தார்.
அதனை அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் நெஞ்சில் கைவைத்து அப்படியே திரும்ப படித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சர்மிளா பிரபாகரன் (தா.பேட்டை), மாலா ராமச்சந்திரன் (முசிறி), அமிர்தவல்லி (மணப்பாறை), ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் (புள்ளம்பாடி), கமலம் கருப்பையா (மணிகண்டம்), பழனியாண்டி (மருங்காபுரி), பொறியாளர் குணசீலன் (வையம்பட்டி), துரைராஜ் (அந்தநல்லூர்), தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன் (தா.பேட்ைட), ராமச்சந்திரன், காட்டுக்குளம் கணேசன் (முசிறி), செல்வராஜ், சின்னடைக்கன் (மருங்காபுரி), ராயம்பட்டி ராமசாமி (மணப்பாறை), பி.எம்.சபிபுல்லா (வையம்பட்டி), கருப்பையா (மணிகண்டம்), மாவட்ட பிரதிநிதி வெள்ளக்கல் விஸ்வநாதன் என்ற ராஜேந்திரன், அம்மாபேட்டை முன்னாள் தலைவர் காந்தி என்ற அழகப்பன், மணிகண்டம் ஒன்றிய முன்னாள் செயலாளர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலை வாணன் நன்றி கூறினார்.