விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கியதாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது முதியவர் புகார்
ராணிப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கியதாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியவர் புகார் கொடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணுவை சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் நேற்று தனது மகன் ஜெய்கணேசுடன், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
எனக்கு உஷா (58) என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர். ஜெய்கணேசுக்கும், சோளிங்கரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தோம். அதன்பின்னர் கடந்த ஒருவருடமாக கருத்து வேறுபாடு காரணமாக ஜெய்கணேசும், புவனேஸ்வரியும் பிரிந்து விட்டனர். புவனேஸ்வரி சோளிங்கரில் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையில் புவனேஸ்வரி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவ்வப்போது ஜெய்கணேசை விசாரணைக்கு அழைத்தனர். அவரும் விசாரணைக்கு சென்று வந்தார்.
கடந்த 28-ந் தேதி எனது வீட்டிற்கு பெண் போலீசார் வந்து, ஜெய்கணேசை இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி அழைத்து வர கூறியதாக தெரிவித்தனர். அவர் வீட்டில் இல்லை வெளியில் சென்றுள்ளதாக கூறினேன். உடனடியாக அவர்கள் என்னையும், எனது மனைவியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
அவர்களின் தூண்டுதலில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, என்னையும், எனது மனைவியையும் தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கினார். இதில் எனது மனைவிக்கு பல் உடைந்து ரத்தம் வழிந்தது. என்னையும் பலமாக தாக்கினார்.
பின்னர் இங்கு அடித்ததை வெளியே கூறினால் குடும்பத்தினர் அனைவர் மீதும் வெளியே வரமுடியாதபடி வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என மிரட்டி, எங்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து பெற்று கொண்டு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து நானும், எனது மனைவியும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். எனவே எங்களை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.