கே.ஆர்.நகா் அருகே கரும்பு தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டி மீட்பு
கே.ஆா்.நகர் அருகே கரும்பு தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது. அந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மிர்லே கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று சந்தோஷ் தனது நிலத்தில் விளைந்த கரும்பை அறுவடை செய்தார். அப்போது அவருடைய கரும்பு ேதாட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று கிடந்தது. அந்த சிறுத்தை குட்டி விளையாடி கொண்டிருந்தது.
இதனை பார்த்த சந்தோஷ் மற்றும் சக தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுத்தை பிறந்து ஒரு மாதம் தான் இருக்கும். மேலும் அந்தப்பகுதியில் தாய் சிறுத்தை இருக்கிறதா? என்று பார்த்தனர். ஆனால் அங்கு தாய் சிறுத்தை இல்லை.
கரும்பு தோட்டத்தில் சிறுத்தை குட்டி கிடந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மிர்லே மட்டுமின்றி சுற்றுவட்டார மக்கள் அங்கு வந்து சிறுத்தை குட்டியை பார்த்து சென்றனா். மேலும் அந்த குட்டியை கையில் தூக்கி படம் எடுத்து கொண்டனர். இதையடுத்து சந்தோஷ், சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தை குட்டியை கிராம மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த சிறுத்தை குட்டியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சிறுத்தை குட்டி பிறந்து ஒரு மாதமே ஆகிறது. இந்த குட்டியை, தாய் சிறுத்தை கரும்பு தோட்டத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வேட்டைக்கு சென்றிருக்கலாம். இந்த சிறுத்தை குட்டியை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைப்பதா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.