மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி எதிரே வந்தவரும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை

சென்னை மண்ணடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒருவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2020-01-31 22:00 GMT
பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவா (வயது 47). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை மண்ணடி பிரகாசம் சாலையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

அப்போது ஏழுகிணறு பகுதியை சேர்ந்த முகம்மது யாசின் (வயது 37) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார். அப்போது முகம்மது யாசினின் மோட்டார் சைக்கிளும், சிவா வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பலமாக மோதியது.

அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த முகம்மது யாசினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் சிவாவும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தார். இதையடுத்து, அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிவாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்