நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் மாறி 200 கிலோ மீட்டர் சுற்றி வந்தது
மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் மாறி 200 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு வாணியம்பாடி வந்தது. இதனால் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
வாணியம்பாடி,
மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையில் இருந்து கிளம்பியது. இந்த ரெயில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக கே.ஆர்.புரம் (கிருஷ்ணராஜபுரம்), பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் வழியாக சேலம் சென்று அங்கிருந்து நாகர்கோவில் செல்ல வேண்டும்.
ஆனால் இந்த ரெயில் நேற்று காலை 10.30 மணிக்கு கே.ஆர்.புரம் அருகே வரும்போது, ரெயில் பாதையில் கோளாறு இருப்பதாக கூறி ரெயிலின் தடத்தை மாற்றி விட்டனர். இதனால் ஆந்திர மாநிலம் குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டது.
இந்த ரெயில் பிற்பகல் 1.25 மணிக்கு வாணியம்பாடி ரெயில் நிலையம் வந்தபோது ரெயில் தடம் மாறி 200 கிலோமீட்டர் சுற்றி வருவதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு ரெயிலில் இருந்த பங்காருபேட்டை, குப்பம், கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தங்களை கொண்டு போய் சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களில் விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலைய அதிகாரிகள் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரெயில் நிலைய மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளிடம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கு தயாராக உள்ள பயணிகள் ரெயிலில் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் செல்லும் படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து சுமார் 30 நிமிடத்துக்கு பின்பு தடம் மாறிவந்த ரெயில் மீண்டும் புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு சென்று, அங்கிருந்து சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
எந்த அறிவிப்பும் செய்யாமல் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் ரெயிலை தடம் மாறி இயக்கியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஉள்ளானார்கள்.