“மக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி” - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
மக்களை பிளவுபடுத்தி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். நெல்லையில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நெல்லை,
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிரதமர் மோடி இந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் திசை திருப்புகின்றன. அதில் இருக்கும் உண்மை தெரியாமல் பேசுகின்றனர் என்று கூறிஉள்ளார். இதில் பிரதமர் மோடி பேச்சில்தான் உண்மை இல்லை, அவர் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
இந்த சட்டங்களுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்குவங்காளம், ராஜஸ்தான் மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமாரும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிஉள்ளார். எனவே, தமிழக அரசும் தனது தவறை புரிந்து கொண்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தனி மனித உரிமைகள் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் பாரம்பரியமாக இந்திய குடிமகனாக வாழ்ந்து வருகிறவர்கள் கூட, குடியுரிமையை இழந்து அதை பெறுவதற்காக சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும். இந்த சட்டங்களால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் தேசிய மக்கள் தொகை படிவேட்டுக்கு மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளார்கள். மக்களை பிளவு படுத்தி மத்திய பா.ஜனதா அரசு ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உரிமைகளை மத்திய பா.ஜனதா அரசு அபகரித்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, மத்திய அரசை எதிர்க்க முடியாமல் கைப்பாவையாக செயல்படுகிறது. எனவே, இதை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், த.மு.மு.க. செயலாளர் பிலால், கட்சி செயலாளர் ஜமால், பொருளாளர் ஷேக் ஆகியோர் உடனிருந்தனர்.