கர்நாடக பட்ஜெட் மார்ச் 5-ந் தேதி தாக்கல் முதல்-மந்திரி எடியூரப்பா சொல்கிறார்
கர்நாடக பட்ஜெட் மார்ச் மாதம் 5-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் டவுனில் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு நேற்று ராஜகோபுரத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து நேற்று காலையில் தனி ஹெலிகாப்டர் மூலம் மைசூரு மாவட்டம் கே.ஆர். நகருக்கு வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து அவர் இறங்கினார். அப்போது அவருக்கு மடாதிபதிகள், முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதையடுத்து அவர் கார் மூலம் சத்தமாத்ருக்கா தேவி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு ராஜகோபுரத்தை திறந்து வைத்த அவர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கே.ஆர்.நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பயங்கரமான சேதம் ஏற்பட்டது. அதனால் ஏராளமான மக்கள் தங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறினர். அவர்களுக்கு மீண்டும் அதே கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். இது உறுதி. இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
அப்போது அவருடன் மந்திரி அசோக், ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.