கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற முயன்றவர்கள் கைது
கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற முயன்றவர்கள் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றி போராட்டம் நடத்த ராமேசுவரத்தில் சிவசேனா கட்சியினர் முடிவு செய்திருந்தனர். இதன்படி கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து சிவசேனா கட்சியின் மாநிலதுணை தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் இளைஞரணி மாநில துணை தலைவர் திருமுருகதினேஷ், மாவட்ட தலைவர் சதீஷ், இந்து தேசிய கட்சி பொறுப்பாளர் மணி, அகிலபாரத இந்து மக்கள்அமைப்பின் தலைவர் சிவக்குமார் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தனர். அங்கு அவர்கள் கையில் தேசியகொடியுடன் அக்னிதீர்த்த கடலில் இறங்கி கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்சந்தனமாரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து கச்சத்தீவு செல்லவோ, போராட்டம் நடத்தவோ அனுமதி கிடையாது என கூறி அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதேபோல திருப்பூரை சேர்ந்த இந்து மக்கள் கட்சியினர் 8 பேர் கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற ராமேசுவரம் வந்தனர். அவர்களை பஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.