அனைத்துத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

Update: 2020-01-25 22:48 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத்துறை திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாகவும், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து இந்த திட்ட பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), தனியரசு (காங்கேயம்), போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜா, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, துணைத்தலைவர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்