தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் சனபிரட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 12.8.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110–ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியும் இல்லாததை கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கரூர் மாவட்டத்தில் ஒரு புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்குவதற்கு கடந்த 19.1.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு முதலில் ரூ.229 கோடி நிதி ஒதுக்கினார். அதன் பிறகு தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக ரூ.40 கோடி நிதிஒதுக்கீடு செய்து, இந்திய மருத்துவக்குழும விதிகளின்படி கரூர் சனபிரட்டியில் ரூ.269 கோடியே 58 லட்சம் மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அரசாணை கடந்த 27.6.2018 அன்று வெளியிடப்பட்டது. இக்கல்லூரி 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், ரூ.115 கோடி மதிப்பில் 800 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் விரைவில் முதல்–அமைச்சரால் திறக்கப்பட உள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை வைத்து, இந்த மருத்துவக்கல்லூரிக்கு தேவையான திட்டங்களை, அதிநவீன வசதிகளை தொடர்ந்து பெற்று தந்துள்ளார். அந்த வகையில், ஏற்கனவே சி.டி.ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் அதிநவீன இருதய சிகிச்சை பிரிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். விரைவில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அதிநவீன இருதய சிகிச்சை பிரிவு வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் வரலாற்றுச்சாதனையாக 9 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்திய அளவில் உள்ள மருத்துவக்கல்லூரிகள் ஆண்டுதோறும் 100 மாணவர்களை சேர்க்கும் அளவிற்குத்தான் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஆண்டில் 150 மாணவர்கள் பயிலும் அளவிற்கு கல்லூரிகள் உருவாக்கப்பட்ட உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை, இந்தியாவிலும் இல்லை. சீனாவில் கொரோனா பாதிப்பு வந்தவுடனேயே தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. சீனாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு விமானம் வருகின்றது. அந்த விமானம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் குறித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நெபோலா, நிப்பா வைரஸ் பரவியபோதும் எந்தவித பாதிப்பும் தமிழகத்தில் இல்லாத அளவிற்கு தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.