ஆய்வறிக்கை தாக்கல் செய்து 4 மாதமாகியும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றாதது ஏன்? - விவசாயிகள் கண்டனம்

ஆய்வறிக்கை தாக்கல் செய்து 4 மாதமாகியும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றாதது ஏன்? என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-25 22:15 GMT
கூடலூர், 

கூடலூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் கூடலூர் ஒட்டான்குளத்தில் வந்து சேருகிறது. மேலும் முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலமும் இந்த குளத்துக்கு தண்ணீர் வருகிறது.

இந்நிலையில் ஒட்டான்குளத்துக்கு தண்ணீர் வரும், சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே கடந்த 2011-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அருவியில் இருந்து வரும் தண்ணீரின் பாதை மறிக்கப்பட்டு திசை மாறியது. இதன்காரணமாக ஒட்டான்குளத்துக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர், தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்படி மாவட்ட உதவி வன அலுவலர் மகேந்திரன், உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வம், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி ஆகியோர் நீர்வீழ்ச்சி அருகே ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நிலச்சரிவை அகற்றி ஒட்டான்குளத்துக்கு நீர்வழிப்பாதை ஏற்படுத்துவதற்கு ஆகும் செலவு குறித்து மாவட்ட கலெக்டருக்கு அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர்.

ஆனால் ஆய்வறிக்கை தாக்கல் செய்து 4 மாதமாகியும், சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு அகற்றப்படாமல் உள்ளது. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிலச்சரிவை அகற்றி ஒட்டான்குளத்துக்கு நீர்வழிப்பாதை ஏற்படுத்த வகை செய்யும் ஆய்வறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்