கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர் - தமிழகத்திற்கு அழைத்து வர பெற்றோர் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவரை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-01-25 23:15 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-கண்மணி தம்பதியின் 2-வது மகன் மணிசங்கர் (வயது 23). சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த மணிசங்கருக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வில் போதிய கட்-ஆப் மதிப்பெண்கள் கிடைக்காததாலும், அவரது பெற்றோர்களிடம் போதிய பண வசதி இல்லாததாலும் தமிழகத்தில் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சீனாவில் மருத்துவக்கல்வி படிக்கலாம் என முடிவெடுத்த மணிசங்கர், நண்பர்கள் உதவியோடு சீனாவில் வூஹான் நகரில் உள்ள வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவராக கடந்த 2014-ம் ஆண்டு சேர்ந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக அங்கு மணிசங்கர் மருத்துவம் பயின்று வரும் நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மணிசங்கருடன் படிக்கும் மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். ஆனால் மணிசங்கர் ஊருக்கு வராமல் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். அவருடன் தமிழகத்தை சேர்ந்த மேலும் 5 மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு மணிசங்கர் நாடு திரும்புவதற்காக சீனாவின் வூஹான் விமான நிலையத்திற்கு சென்றார். ஆனால் சீனாவில் இருந்து யாரும் வெளியேறவும், வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வரவும் அந்த நாட்டு அரசு தடை விதித்து இருப்பதால் மீண்டும் மணிசங்கர் பல்கலைக்கழக விடுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் மணிசங்கர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அண்டனூர் கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் தங்களது மகனின் நிலை கண்டு பெரும் துயரத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் கடந்த 22-ந் தேதி தொலைபேசியில் தங்களிடம் பேசிய மணிசங்கர் ஊர் திரும்புவதற்காக விமான நிலையம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். ஆனால் அதன் பின்பு சீன அரசு நாடு திரும்ப அனுமதிக்காததால் மீண்டும் பல்கலைக்கழக விடுதிக்கு சென்றுவிட்டதாக கூறினார். மேலும் அங்கு உணவு கூட கிடைக்காத சூழ்நிலையில் மணிசங்கர் மிகுந்த அச்சத்தில் உள்ளார். அங்கு தற்போது கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் எங்கள் மகனை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அண்டனூர் கிராமத்தில் மணிசங்கரின் பெற்றோர் மட்டுமின்றி அந்த கிராம மக்களும் மருத்துவ மாணவர் மணிசங்கருக்கு ஏற்பட்டு உள்ள துயரநிலை கண்டு வேதனை அடைந்து உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணி சங்கர் மற்றும் அவருடன் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்