நாகர்கோவிலில் இன்று குடியரசு தினவிழா: கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றுகிறார்
நாகர்கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றுகிறார். விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.
நாகர்கோவில்,
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குடியரசு தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் குடியரசு தினவிழா இன்று காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. கலெக்டர் பிரசாந்்த் வடநேரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் 14 பேருக்கு ரூ.91 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
இதையொட்டி அண்ணா விளையாட்டரங்கத்தில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை கடந்த சில நாட்களாக நடந்தது. நேற்று நடந்த ஒத்திகையின்போது, குடியரசு தினவிழாவில் காவல்துறை அணிவகுப்பை பார்வையிடுவதற்காக கலெக்டர் வெள்ளைநிற திறந்த ஜீப்பில் செல்வதைப்போன்று, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயிலை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கோட்டாட்சியருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் பங்கேற்றார்.
இதேபோல் குடியரசு தினவிழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். அதில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நேற்று நடந்த ஒத்திகையின் போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் போன்றவற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.