கரும்பு கடை வைத்ததை தட்டிக்கேட்ட கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - வியாபாரி கைது
ஆண்டிப்பட்டியில் கூட்டுறவு பண்டகசாலை முன்பு கரும்பு கடை வைத்ததை தட்டிக்கேட்ட மேலாளர் மற்றும் விற்பனையாளர்களை அரிவாளால் வெட்டிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 43). கரும்பு வியாபாரி. இவர் நேற்று காலை ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலை முன்பு கரும்பு கடை வைத்திருந்தார். அப்போது பாதையை மறித்து கரும்பு கடை வைத்திருப்பது குறித்து கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டைச்சாமி மற்றும் விற்பனையாளர்கள் முருகேசன், பெரியசாமி ஆகியோர் நாகராஜிடம் தட்டிக்கேட்டனர். மேலும் நாகராஜிடம் கடையை வேறு இடத்தில் மாற்றி வைக்கும்படி கூறினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டைச்சாமி மற்றும் விற்பனையாளர்கள் பெரியசாமி, முருகேசன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து கரும்பு வியாபாரி நாகராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரிவாளால் காயம் ஏற்படுத்துதல், கொலைமிரட்டல், பொதுஇடத்தில் அசிங்கமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான நாகராஜ் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் மற்றும் விற்பனையாளர் களை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.