பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்? ஜீவஜோதி பேட்டி

பா.ஜ.கவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து ஜீவஜோதி பேட்டியளித்தார்.

Update: 2020-01-24 22:15 GMT
தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடியை சேர்ந்தவர் ஜீவஜோதி(வயது 39). இவருடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியின் தந்தை ராமசாமி, சரவண பவன் ஓட்டலில் பணியாற்றி வந்ததால் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஜீவஜோதி அறிமுகமானார். இவரை திருமணம் செய்துகொள்ள ராஜகோபால் ஆசைப்பட்டார். இந்த நிலையில் கூலிப்படையினரால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபாலை சென்னை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜகோபால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இறப்புக்கு பிறகு தஞ்சைக்கு வந்த ஜீவஜோதி தனது பள்ளி நண்பர் தண்டாயுதபாணியை மறுமணம் செய்து கொண்டு புதிய பஸ் நிலையம் அருகே தையல் கடை வைத்து நடத்தி வந்தார்.

தற்போது தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் தனது தந்தை ராமசாமி பெயரில் ஓட்டல் திறந்து நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி, பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என விரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவிலில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற ஜீவஜோதி, பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துகொண்டார்.

பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து ஜீவஜோதி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலில் பணியாற்ற எனக்கு ஆர்வம் இருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு.

நான் இன்று உயிருடன் இருப்பதற்கு ஜெயலலிதா தான் காரணம். அரசியல் வாழ்வில் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் எனக்கு பிடிக்கும்.

பாதுகாப்பு கருதி நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. எனக்கு எந்த பயமும் கிடையாது. பயம் இருந்திருந்தால் 19 ஆண்டுகளுக்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன். வழக்கு முடிந்துவிட்டதால் முழு நேரமும் அரசியலில் ஈடுபடலாம் என கட்சியில் இணைந்துள்ளேன். பா.ஜ.க.வின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்ற விரும்புகிறேன்.

பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்த துணிச்சல் யாருக்கு வரும். இந்த பிரச்சினையில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. ரஜினிகாந்தை நானும் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்