ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை: வளர்ப்பு மகன் உள்பட 4 பேர் கைது சொத்து பிரச்சினையில் தீர்த்து கட்டியது அம்பலம்

பெலகாவியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வளர்ப்பு மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சொத்து பிரச்சினையில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-01-24 22:30 GMT
பெலகாவி,

பெலகாவி மாவட்டம் பைலஒங்களா தாலுகா தொட்டவாடா கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்த் அந்தானஷெட்டி (வயது 60). இவரது 2-வது மனைவி சாந்தவ்வா (55). சிவானந்தின் முதல் மனைவி பெயர் கஸ்தூரி ஆகும். சிவானந்த், கஸ்தூரி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதையடுத்து, சிவானந்த் தனது சகோதரியின் மகனான சிவப்பாவை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சாந்தவ்வாவை 2-வதாக சிவானந்த் திருமணம் செய்திருந்தார். சாந்தவ்வாவுக்கு ஏற்கனவே திருமணமாகி வினோத் என்ற மகன் இருந்தான். அவரது கணவர் இறந்து விட்டதால் சிவானந்தை சாந்தவ்வா 2-வது திருமணம் செய்திருந்தார்.

திருமணத்திற்கு பின்பு சாந்தவ்வாவின் மகன் வினோத் சிவானந்த் வீட்டிலேயே வசித்து வந்தார். இதுதொடர்பாக சிவானந்த், அவரது முதல் மனைவி கஸ்தூரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, சிவானந்துடன் வாழ பிடிக்காமல் கஸ்தூரி பிரிந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில், கடந்த 18-ந் தேதி நள்ளிரவு சிவானந்த், அவரது மனைவி சாந்தவ்வா, வினோத் ஆகிய 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கினார்கள். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிவானந்த், சாந்தவ்வா, வினோத் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து தொட்டவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிவானந்தின் வளர்ப்பு மகனான சிவப்பா உள்பட 4 பேரை தொட்டவாடா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 3 பேரும் சிவப்பாவின் உறவினர் கோவிந்த், நண்பர்கள் பசவந்தப்பா, மல்லிகார்ஜுன் என்று அடையாளம் தெரிந்தது. கைதான சிவப்பாவிடம் நடத்திய விசாரணையில் பர பரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது சிவானந்த் 2-வது திருமணம் செய்ததுடன், சாந்தவ்வாவின் மகன் வினோத்தையும் வீட்டில் இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அத்துடன் வினோத்திற்கு ஒரு பெண்ணை பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்திருந்தார். வினோத்திற்கும், அந்த பெண்ணுக்கும் வருகிற 30-ந் தேதி திருமணமும் நடைபெற இருந்தது. அதே நேரத்தில் தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வினோத்திற்கு எழுதி கொடுக்கவும் சிவானந்த் முடிவு செய்திருந்தார். இதுபற்றி அறிந்ததும் சிவானந்துடன், அவரது முதல் மனைவி கஸ்தூரி, வளர்ப்பு மகனான சிவப்பா ஆகியோர் சண்டை போட்டு வந்துள்ளனர். ஆனால் நிலத்தை வினோத் பெயரில் எழுதி கொடுக்கும் முடிவில் சிவானந்த் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவப்பா கடந்த 18-ந் தேதி நள்ளிரவு தனது உறவினர், நண்பர்களுடன் சேர்ந்து தனது வளர்ப்பு தந்தை சிவானந்த், சாந்தவ்வா, வினோத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 4 பேர் மீதும் தொட்டவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்