திருச்செங்கோட்டில், குழந்தைகள் தத்தெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார்
திருச்செங்கோட்டில் நடைபெற்ற குழந்தைகள் தத்தெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் சரோஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எலச்சிபாளையம்,
சமூக பாதுகாப்பு துறை, பராமரிக்கும் கரங்கள் ஆகியவை இணைந்து திருச்செங்கோட்டில் நேற்று குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கை நடத்தின. திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் கிராமப்புற செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசு அனுமதியுடன் தத்தெடுப்பது, இடைத்தரகர்களை நம்பி தத்தெடுக்க கூடாது உள்ளிட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி கொண்டு சென்றனர். முன்னதாக தத்தெடுப்பு பிரசார வாகனத்தை அமைச்சர் சரோஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. பராமரிக்கும் கரங்கள் நிர்வாகி பீட்டர் செல்வராஜ் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு பேசுகையில், தத்துபெறவும், தத்து கொடுக்கவும் அரசு விதித்துள்ள நடைமுறைகளை செவிலியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
இதில் மாநில தத்து ஆதார மைய திட்ட அலுவலர் கிறிஸ்துதாஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா, சமூகநலத்துறை அலுவலர் கோமதி, குழந்தைகள் நலக்குழு தலைவர் கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.