திருவள்ளூர் அருகே இருளர் இன மக்களை தேடிச்சென்று சான்றிதழ் வழங்கிய கலெக்டர் நடனமாடி மேளதாளத்துடன் வரவேற்ற மக்கள்
திருவள்ளூர் அருகே இருளர் இன மக்கள் 58 பேரின் வீடுகளுக்கு தேடிச்சென்று சான்றிதழ் வழங்கிய கலெக்டரை அப்பகுதி மக்கள் நடனமாடி பாட்டுப்பாடி மேளதாளத்துடன் வரவேற்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் இருளர் காலனியில் திரளான இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இருளர் சான்றிதழ் வேண்டி பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உடனடியாக இருளர் இன மக்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 58 இருளர் இன மக்களுக்கு சான்றிதழ்களை உடனடியாக தயார் செய்தனர். இதையறிந்த கலெக்டர் இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று இருளர் இன மக்களுக்கு சான்றிதழ் வழங்குவது என முடிவு செய்தார்.
சான்றிதழ் வழங்கினார்
இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திருப்பாச்சூர் இருளர் காலனிக்கு சென்று அங்கு ஒவ்வொரு இருளர் இன குடிசை வீடுகளுக்கு சென்று 58 பேருக்கும் தனித்தனியாக சான்றிதழ்களை வழங்கினார்.
இதனால் கலெக்டர் தங்கள் வீடுகளுக்கே வந்து தங்களுக்கு சான்றிதழ் வழங்கியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பாட்டுப்பாடி நடனமாடி அவரை மேளதாளத்துடன் வரவேற்றார்கள்.
பின்னர் இருளர் இன மக்கள் கலெக்டருக்கு தலையில் மலர் கிரீடம் வைத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் இருளர் காலனியில் 58 குடும்பங்களுக்கு இருளர் இன சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூரில் 324, பூந்தமல்லியில் 33, ஆவடியில் 14, ஊத்துக்கோட்டையில் 258 என மொத்தம் 629 இருளர் இன மக்களுக்கு இருளர் சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்த இருளர் சான்றுகளை வைத்து பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்பு, கடன் உதவிகள் பெறுவதற்கும், வீடு கட்டுவதற்கும் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த இருளர் சான்றிதழ்கள் முக்கியமானதாக அமையும் என தெரிவித்தார்.
அப்போது இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய விசாரணை மேற்கொண்டு இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், துணை தாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.