வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.92¼ லட்சத்தில் புதிய திருமண மண்டபம் - கட்டுமான பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.92¼ லட்சத்தில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-24 22:30 GMT
கரூர், 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட வெண்ணைமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.92 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய திருமணமண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக் டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, புதிய திருமணமண்டபம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 

வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருமணம் நடத்துபவர்களுக்காகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் பெரிதும் உதவியாக இருக்கும் வகையில் இந்த திருமண மண்டபம் கட்டப்படவுள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 4 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் கட்டப்படும் இந்த மண்டபத்தில், தரைதளத்தில் திருமண அரங்கமும், முதல் தளத்தில் சாப்பாடு பந்தி வைக்கும் அரங்கமும் அமைக்கப்படவுள்ளது என்றார்.

முன்னதாக நெரூர் தென்பாகம் ஊராட்சியில் காட்டு பிள்ளையார்கோவில் அருகிலும், வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சியில் நல்லகுமாரன்பாளையம் பகுதியிலும் ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் நாவல், புங்கை, வேம்பு உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நட்டு வைத்து பேசினார்.

இந்தநிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகரகூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாலசந்திரன், மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்