பெரியபாளையம் அருகே சிமெண்டு கடையின் கதவை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை
பெரியபாளையம் அருகே சிமெண்டு கடையின் கதவை உடைத்து ரூ. 1½ லட்சம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் சிமெண்டு கடை நடத்தி வருபவர் வீரராகவன் (வயது 42). இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். வீரராகவன் நேற்றுமுன்தினம் இரவு தனது கடைக்கு வந்த சிமெண்டு லோடை இறக்கிவிட்டு, கம்பி விற்பனை செய்ததற்கான தொகையான ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை கடையின் கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு (ஷெட்டர்) உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பணம் கொள்ளை
அவர் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வீரராகவன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவுகளை சேகரித்து கொண்டு சென்றனர். இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.