ஊத்தங்கரையில், பிரபல திருடன் கைது - 14 பவுன் நகைகள் மீட்பு

ஊத்தங்கரையில் பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2020-01-24 22:15 GMT
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 54). சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். மேலும் வீட்டில் பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்றார்.

இதே போல ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சம்ரூத் (60). சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகையை திருடி சென்றார்.

ஊத்தங்கரை திருப்பத்தூர் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் தண்டாயுதபாணி (41). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதில் உள்ள டேங்க் கவரில் 3 பவுன் தங்க சங்கிலியை வைத்திருந்தார். இந்த நிலையில் மர்ம நபர் நகையை திருடிச் சென்றார்.

இது தொடர்பாக பழனியம்மாள், சம்ரூத், தண்டாயுதபாணி ஆகியோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், பழனியம்மாள் மற்றும் சம்ரூத் வீட்டிலும், தண்டாயுதபாணியின் தங்க சங்கிலியையும் திருடியது ஊத்தங்கரை அருகே உள்ள கீழ் மத்தூர் குறிஞ்சி தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல திருடன் சந்திர பிரகா‌‌ஷ் (20) என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.

மேலும் செய்திகள்