தூத்துக்குடியில் 95 வயது உறவினரை பராமரிக்காத ஆசிரியை - கணவர் கைது

தூத்துக்குடியில் 95 வயது உறவினரை பராமரிக்காத ஆசிரியை, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-01-24 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கோட்ஸ் நகரை சேர்ந்தவர் நிகோலஸ் (வயது 42). இவருடைய மனைவி இந்திரா (34). இவர்களின் வீட்டில் நிகோலசின் பெரியம்மாவான மரியமிக்கேல் அம்மாள் (95) என்பவர் உள்ளார்.

ஆனால் அவருக்கு சரியாக உணவு, உடைகள் கொடுக்காமலும், பராமரிக்காமலும், அவரை வீட்டில் உள்ள கழிவறையில் தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரிகள் அந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மரியமிக்கேல் அம்மாள் கழிவறையில் வைக்கப்பட்டு இருந்ததும் உணவு, உடைகள் சரியாக கொடுக்காமல் பராமரிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரி கவிதா புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நிகோலஸ், அவருடைய மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் மரியமிக்கேல் அம்மாளை அதிகாரிகள் மீட்டு தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இந்திரா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்