உரங்களின் விலை, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
உரங்களின் விலை, உரத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
வேலூர்,
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் பாராளுமன்ற நிலைக்குழுவினர் விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியும் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.
எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், விஷ்ணுபிரசாத், வசந்தகுமார், பிரதாப்ராவ், மனோஜ் ராஜோரா, அகமத் அஸ்பாக் கரீம், சந்திரசேகர், விஜயபால்சிங், வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கனிமொழி எம்பி. தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலை மற்றும் வாழ்வாதாரம் பற்றி தெரிந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ளோம். வேலூர் மாவட்டத்தில் தான் இந்த குழுவின் முதல் கூட்டம் நடக்கிறது. இந்தக்குழு அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலைக்குழு. விவசாயிகளுக்கு தேவையான உரம் சரியான விலையில் தேவைப்படும் பருவத்தில் கிடைக்கிறதா?. உங்களின் பிரச்சினைகள், குறைகளை நாங்கள் தெரிந்து கொண்டால் தான் அதுபற்றி மத்திய அரசிடம் தெரிவிக்க முடியும்.
எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள், பிரச்சினைகளை ஒளிவுமறைவின்றி உண்மையான நிலவரத்தை கூற வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல்முறையாக போராடிய ஊர் வேலூர். இத்தகைய சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் கருத்துகள், பிரச்சினைகளை கேட்டறிந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள், பிரச்சினைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் மண், தண்ணீர் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். தோல் கழிவுநீரால் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடிநீர் உவர்ப்பு தன்மை அதிகரித்து விட்டது. இதுகுறித்து அரசு ஆராய்ந்து, எந்த பயிர்கள் பயிரிடலாம் என்று தெரிவிக்க வேண்டும். உரங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அதனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே உரங்களின் விலை மற்றும் உரத்துக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. அதிகாரிகளும், அமைச்சர்களும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால் அதனை அவர்கள் செயல்படுத்துவதில்லை. அதனால் விவசாயம் அழிந்து வருகிறது. இன்னும் 20 ஆண்டுகள் இதேநிலை நீடித்தால் விவசாயம் அழிந்துவிடும். விவசாயம் செய்தால் தான் சாப்பிட முடியும். ரூ.100 கோடி இருந்தாலும் நீங்கள் அதனை உண்ண முடியாது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து விவசாய பொருட்களும் இலவசமாக கிடைக்கும் வகையில் விவசாய அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் கனிெமாழி எம்.பி. கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் கொடுப்போம். ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த குழுவின் மூலம் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.