5,635 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி - கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 635 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் ஈரோட்டில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மஞ்சள் முக்கிய பணப்பயிராக உள்ளது. இதில் பூச்சி தாக்குதல், மஞ்சள் விலை குறைவு போன்ற காரணங்களினால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து உள்ளது. எனவே மஞ்சள் சாகுபடியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மஞ்சளில் சுமார் 75 சதவீதம் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு 1 லட்சத்து 16 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 635 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
ஈரோடு மஞ்சளுக்கு பெரும் முயற்சிக்கு பின் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் ஈரோடு மஞ்சளுக்கு தனி முத்திரையுடன் சந்தைப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 2-வது பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு மாவட்ட சந்தை விளங்குகிறது. மேலும் மின்னணு ஏல முறையில் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கருத்தரங்கில் விஞ்ஞானிகள் சிவக்குமார், செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றியும், உயிர் உரங்களின் பயன்பாட்டை மேற்கொள்வது பற்றியும் விளக்கி பேசினார்கள். இதில் மஞ்சள் ரகங்கள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குனர் பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பி.மேகலா, கே.வி.நக்கீரன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.