பாளையங்கோட்டையில் புத்தக திருவிழா 1–ந்தேதி தொடங்குகிறது - கலெக்டர் ஷில்பா பேட்டி

பாளையங்கோட்டையில் புத்தக திருவிழா வருகிற 1–ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-01-24 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் பொதுமக்களின் வாசிப்பு திறன் மற்றும் அறிவுசார் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் பாளையங்கோட்டையில் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வருகிற 1–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை 10 நாட்கள் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு 60 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை ஆனது. இந்த ஆண்டும் அதிகளவு புத்தகங்கள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தக திருவிழா தினமும் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் பகல் நேரத்தில் கலை இலக்கிய போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 5 மணி முதல் 6 மணி வரை உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பேச்சாளர்களின் உரைகள், கவியரங்கம் நடக்கிறது.

8 மணி முதல் 10 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்களின் கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது. தென் தமிழகத்தில் 11 பேர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர். இவர்களும் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

புத்தக திருவிழாவில் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதாவது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 200 பேர் திரளாக கூடி ஓவியம் வரையும் நிகழ்ச்சியும், 28–ந்தேதி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் நடத்தப்படுகிறது.

30–ந்தேதி 3 ஆயிரம் மாணவர்கள் கல்லணை அரசு பள்ளியில் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியும், அதே நாளில் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு பிறகு 15 நிமிடங்கள் புத்தகம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் அன்று வண்ணார்பேட்டையில் இருந்து வ.உ.சி. மைதானம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது.

நெல்லை புத்தக திருவிழா –2020 சிறப்பு நிகழ்ச்சியாக கலை சார் பயிற்சி பட்டறையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓவியம் வரைதல், புகைப்படக்கலை, சமையல், நாட்டுப்புற கலை, சைகை மொழி பயிற்சி, கதை, கவிதை, கட்டுரை எழுதும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கலைசார் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

அங்கு பொதுமக்கள் நலனுக்காக தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி, வாகனம் நிறுத்தும் இடம் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது புத்தக திருவிழா திட்ட அலுவலர்களும், பயிற்சி உதவி கலெக்டர்களுமான சிவகுரு பிரபாகரன், அனிதா, நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தலைவர் நாறும்பூநாதன் மற்றும் எழுத்தாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்