பல்லடம் அருகே, மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - காப்பாற்றும்போது கீழே குதித்தார்
பல்லடம் அருகே மின்கம்பத்தில் ஏறி, தொழிலாளி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றும்போது, ஏணியில் இருந்து கீழே குதித்தார்.
பல்லடம்,
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள காளிவேலம்பட்டி பிரிவு அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்தில் 40 வயது மதிக்க தக்க ஒருவர் திடீரென்று மேலே ஏறினார். பின்னர் மின் கம்பத்தின் உச்சிக்கு சென்றதும், கீழே குதிக்கப்போகிறேன் என்று அந்த வழியே செல்லும் பொதுமக்களிடம் சத்தம் போட்டபடி கூறிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வண்டி ஏணி மூலம் அவரை மீட்டனர். ஏணி கீழே வரும் பொழுது ஏணியில் இருந்து அவர் கீழே குதித்து விட்டார். இதனால் அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர்.
விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமரகுரு நாதன் (வயது39) என்பதும், தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில் கோவையில் உள்ள நண்பருடன் பல்லடம் பகுதியில் காவலாளி வேலைக்கு வந்தவர். நண்பருடன் ஏற்பட்ட தகராறில் நண்பரை பயமுறுத்துவதற்காக மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.