கருத்தை ரஜினிகாந்த் திரும்பப்பெற வேண்டும் - நாராயணசாமி விருப்பம்

பெரியார் குறித்த தனது கருத்தை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.;

Update: 2020-01-23 23:42 GMT
புதுச்சேரி, 

சென்னை துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுகள் தற்போது விவாத பொருளாக மாறிவிட்டது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாள்தோறும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர், தனிமனித உரிமைக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பெரியார்.

அவரைப்பற்றி நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் விமர்சித்து பேசியுள்ளார். உண்மையாக அவர் பேசியபடியான சம்பவம் நடந்ததா? என்பது குறித்து ஆராய்ந்து அவர் பேசியிருக்கவேண்டும். சில தகவல்களை வைத்து பெரியாரையும் திராவிட கழகத்தையும் விமர்சித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

எந்தவிதமான முகாந்திரமுமின்றி ரஜினிகாந்த் இப்படி பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அவரது கருத்தை திரும்பப்பெற்று இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்