மங்களூரு விமான நிலைய வெடிகுண்டு வழக்கு கைதான என்ஜினீயருக்கு 10 நாள் போலீஸ் காவல் போலீசார் தீவிர விசாரணை

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைதான என்ஜினீயர் ஆதித்யாராவுக்கு 10 நாள் போலீஸ் காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Update: 2020-01-23 22:50 GMT
மங்களூரு, 

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

வெடிகுண்டு சிக்கியது

இங்கு கடந்த 20-ந்தேதி ஆட்டோவில் வந்த மர்மநபர் வெடிகுண்டுகள் இருந்த பையை வைத்து சென்றிருந்தார். அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் வெடித்து செயலிழக்க வைத்தனர்.

இந்த வெடிகுண்டுகள் இருந்த பையை ஆட்டோவில் வந்த நபர் எடுத்து வருவதும், பின்னர் அதனை விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே முக்கிய பிரமுகர்களின் கார் நிறுத்தும் இடத்தில் விட்டு சென்றதும், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.

மங்களூருவுக்கு அழைத்துவரப்பட்டார்

இதைதொடர்ந்து பெங்களூருவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்த என்ஜினீயரான ஆதித்யாராவ் சரண் அடைந்தார். அவரை மங்களூரு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் விமானம் மூலம் அவரை பெங்களூருவில் இருந்து இரவு 7.30 மணிக்கு அழைத்து வந்தனர். இரவு 9 மணி அளவில் மங்களூருவுக்கு அழைத்துவரப்பட்ட ஆதித்யாராவ் பனம்பூரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் இரவு முதல் விசாரணை நடத்தினர்.

அடுக்கடுக்கான கேள்விகள்

நேற்று காலையும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 தனிப்படை போலீசாரும் துப்பு துலக்கினர். அவரிடம் வெடிகுண்டு தயாரிக்க பொருட்கள் எப்படி கிடைத்தது?, ஓட்டலில் வேலை பார்த்த போது வெடிகுண்டுவை தயாரித்தது எப்படி?. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்க யாராவது உதவினார்களா? என பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் கேட்டு தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

கோர்ட்டில் ஆஜர்

இந்த விசாரணை நேற்று மாலை 4 மணி வரை நடைபெற்றது. விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது மற்றும் மங்களூருவில் இருந்து ஐதராபாத் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஆகிய இரு வழக்குகளிலும் இன்னும் ஏராளமான தகவல்கள் அவரிடம் பெற போலீசார் முடிவு செய்தனர். இதனால் அவரை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டனர்.

அதைதொடர்ந்து மாலை 4.15 மணி அளவில் ஆதித்யாராவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மங்களூரு 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் நீதிபதி கிஷோர் குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.

10 நாள் போலீஸ் காவல்

அப்போது போலீசார், ஆதித்யாராவிடம், வெடிகுண்டு வைத்தது மற்றும் விமானத்துக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 15 நாட்கள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதி, ஆதித்யாராவிடம் 10 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் வேனில் பனம்பூரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்