விபத்தில் இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.30½ லட்சம் இழப்பீடு - தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு
விபத்தில் இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் குடும்பத்துக்கு ரூ.30½ லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாபுசுனில்தத். இவருடைய மனைவி செல்வமணி. இவர்களது மகன் தங்கசிவராமன்(வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 10-4-2017 அன்று தங்கசிவராமன், தனது நண்பருடன் கோவை- பாலக்காடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அவர் செட்டிப்பாளையம் மரப்பாலம் விலக்கு அருகே சென்ற போது, எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தங்கசிவராமன் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து தங்கசிவராமனின் பெற்றோர் தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், இறந்த தங்கசிவராமனின் பெற்றோருக்கு ரூ.30 லட்சத்து 54 ஆயிரம் இழப்பீடு தொகையும், 7½ சதவீதம் வட்டியும் வழங்க லாரியின் இன்சூரன்சு நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டார்.