பெண்களிடம் குறும்பு செய்த என்ஜினீயர் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் குறும்பு செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-23 22:45 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நங்கநல்லூர் டி.என்.ஜி.ஓ. காலனி 7-வது தெருவில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென நடந்துசென்ற இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றுவிட்டார்.

அந்த வாலிபர் மீண்டும் அதே பகுதியில் நடந்துசென்ற வேறு ஒரு பெண்ணின் பின்புறத்தை தட்டும்போது அப்பகுதியினர் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர், சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவைச் சேர்ந்த சதீஷ்குமார்(வயது 30) என்பதும், கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது.

நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரிந்தது. பல பெண்களிடம் இதேபோல் அவர் குறும்பு செய்து உள்ளார். இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்