திருமுல்லைவாயலில் பரிதாபம்: கிணற்றில் தவறிவிழுந்து 3 வயது பெண் குழந்தை பலி

திருமுல்லைவாயலில் கிணற்றில் தவறிவிழுந்து 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-01-23 22:15 GMT
ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹேமகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுடைய மகள்கள் மித்ரா(வயது 3) மற்றும் தியா(8 மாதம்).

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 6-வது குறுக்கு தெருவில் சரண்யாவின் அக்காள் லாவண்யா வசித்து வருகிறார். அவருடைய கணவர் யுவராஜ் என்பவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரை பார்ப்பதற்காக சரண்யா தனது 2 மகள்களுடன் அக்காள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

நேற்று மதியம் 1 மணி அளவில் சரண்யா தனது 8 மாத பெண் குழந்தை தியாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த மூத்த மகள் மித்ரா மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டை சுற்றி தேடியும் காணவில்லை. வீட்டின் பின்புறம் மூடப்படாமல் உள்ள உரை கிணற்றில் எட்டிப்பார்த்தபோது, அங்கு குழந்தை மித்ரா தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு அலறினார். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மித்ரா, கிணற்றை எட்டிப்பார்த்தபோது உள்ளே தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்