திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; வாலிபர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர். ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவரும் சிக்கினார்.

Update: 2020-01-23 22:15 GMT
செம்பட்டு,

துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி, இறைச்சி கடையில் பயன்படுத்தக்கூடிய நவீன எந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அவர் சென்னையை சேர்ந்த யூனுஸ் (வயது 36) என்பதும், அவர் அந்த எந்திரத்தில் 2 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், யூனுசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.79 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் டாலர்

இதேபோல் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (47) என்பவர், தனது உடைமைக்குள் மறைத்து இந்திய ரூபாய் மதிப்பில் 5.90 லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் டாலரை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிங்கப்பூர் டாலரை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்