நெல்லையப்பர் கோவிலில் புதுமையான தீபங்கள் - இன்று ஏற்றப்படுகிறது

நெல்லையப்பர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) புதுமையான தீபங்கள் ஏற்றப்படுகிறது.

Update: 2020-01-23 22:00 GMT
நெல்லை, 

திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி-நெல்லையப்பர் கோவிலில் 1864-ம் ஆண்டு கோடகநல்லூர் சுந்தர சுவாமியால் தை அமாவாசை தினத்தன்று ஆண்டுதோறும் பத்தாயிரம் தீபமும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபம் ஏற்றி விழா கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கடந்த 19-ந்தேதி தங்க விளக்கு மற்றும் வெள்ளி விளக்குகள் ஏற்றப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) லட்ச தீபங்கள் ஏற்றி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை முதல் பல்வேறு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சமீபத்தில் லட்ச தீபத்திருவிழா நடைபெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் எவ்வாறு தீபம் ஏற்றப்பட்டதோ, அதேபோல் நெல்லையப்பர் கோவிலிலும் லட்ச தீப திருவிழாவை சிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

புதிய பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிய வைக்கப்படும் அலங்கார தீப விளக்குகளான 12 அடி உயரம் கொண்ட சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்கு வரிசை, 18 அடி உயரம் கொண்ட 3 கோள வடிவ சுழலும் விளக்கு வரிசை, 8 அடி உயரம் கொண்ட ராட்டின வடிவில் அமைந்த சுழலும் விளக்கு வரிசை ஆகிய 3 விதமான விளக்குகள் நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டில் முதன்முதலாக நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும் நிகழ்ச்சி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் நாராயணன், ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்