கள்ளக்குறிச்சி அருகே, 2 பெண்களை உருட்டுக்கட்டையால் தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் 2 பெண்களை உருட்டுக்கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-23 21:45 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி முனுதாயி(வயது65). இவருடைய வீட்டில் அவரது தங்கை அரும்புவும்(47). தங்கை மகள் பிரியாவும்(29) தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இவரது வீட்டின் மீது கற்கள் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த முனுதாயும், அரும்புவும் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் ,உருட்டுக்கட்டைகளு டன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உருட்டுக் கட்டையால் முனுதாயியையும், அரும்புவையும் தாக்கி, இருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலிகளை பறித்துச்சென்றனர். கொள்ளையர்கள் பறித்து சென்ற 8 பவுன் நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கொள்ளையர்கள் தாக்கியதில் அரும்புவின் தலையிலும், தங்கசங்கிலியை கொள்ளையர்கள் இழுத்ததில் கழுத்திலும் லேசான காயம் ஏற்பட்டது. இதேப்போல் முனுதாயியின் கழுத்திலும் காயம் ஏற்பட்டது.

இது பற்றி முனுதாயி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்