விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு பெங்களூரு போலீசில் என்ஜினீயர் சரண் மங்களூருவுக்கு அழைத்து சென்று விசாரணை

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய வழக்கில் உடுப்பி என்ஜினீயர் பெங்களூரு போலீசில் சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார். அவரை மங்களூருவுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2020-01-22 23:30 GMT
பெங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 20-ந் தேதி காலையில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே கிடந்த பையில் வெடிகுண்டு சிக்கியது.

வெடிகுண்டு சிக்கியது

அந்த வெடிகுண்டுவை கைப்பற்றிய போலீசார் அன்றைய தினமே விமான நிலையம் அருகே உள்ள கெஞ்சாரு மைதானத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர். இதன்மூலம் மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க முயன்ற சதி முறியடிக்கப்பட்டதுடன், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஏனெனில், அந்த வெடிகுண்டுகள் ஐ.இ.டி. ரகத்தை சேர்ந்தது என்றும், சக்தி வாய்ந்தது என்றும் கூறப்பட்டது. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பஜ்பே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆட்டோவில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு இருந்த பையுடன் வருவதும், அவர் தான் அந்த பையை வைத்து செல்வதும் தெரியவந்தது.

இதைெதாடர்ந்து வெடிகுண்டு வைத்த மர்மநபரை பிடிக்க மங்களூரு போலீஸ் கமிஷனர் ஹர்ஷா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கேரள மாநிலம், மங்களூரு, கர்நாடகத்தின் பிற பகுதிகளில் முகாமிட்டு மர்மநபர்களை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். மங்களூருவுக்கு சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

அடையாளம் தெரிந்தது

மேலும் மர்மநபரின் புைகப்படம் மங்களூரு, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் மங்களூரு போலீசார் முன்பு சரண் அடைந்த ஆட்டோ டிரைவரும் மர்மநபர் பற்றிய தகவல்களை தெரிவித்தார்.

அத்துடன் விமான நிலைய பகுதியில் மர்மநபர் சர்வ சாதாரணமாக உலாவரும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துவிட்டு சென்ற நபர் உடுப்பி மாவட்டம் மணிப்பால் அருகே கே.எச்.பி. காலனியை சேர்ந்த ஆதித்யா ராவ் என்பதும், அவர் ஒரு என்ஜினீயர் என்பதும் அடையாளம் தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய மங்களூரு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.

டி.ஜி.பி. அலுவலகத்தில் சரண்

மேலும் உடுப்பியில் வசிக்கும் ஆதித்யா ராவின் தந்தை, உறவினர்களிடம் நேற்று முன்தினம் இரவு போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். அத்துடன் ஆதித்யா ராவ் வேலை செய்த ஓட்டலுக்கு சென்றும் விசாரித்தனர். அப்போது அவர் ஓட்டலுக்கு கடந்த சில நாட்களாக வேலைக்கு வரவில்லை என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆதித்யா ராவ் நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் டி.ஜி.பி. நீலமணி ராஜுவை சந்திக்க வேண்டும் என்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களிடம் அவர் கூறியதாக தெரிகிறது.

அத்துடன் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுவை வைத்தது நான் தான் என்றும் போலீசாரிடம் கூறியதுடன், சரணடைய வந்திருப்பதாகவும் ஆதித்யா ராவ் சொல்லியதாக தெரிகிறது. இதையடுத்து, டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ்காரர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து ஆதித்யா ராவை பிடித்தனர். மேலும் டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள அல்சூர்கேட் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

என்ஜினீயர் கைது

உடனே டி.ஜி.பி. அலுவலகத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆதித்யா ராவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அல்சூர்கேட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது நான் தான் என்று போலீசாரிடம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆதித்யா ராவை அல்சூர்கேட் போலீசார் கைது செய்தார்கள். ஏற்கனவே மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பஜ்பே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், கைதான ஆதித்யா ராவ் மீது அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் ஹர்ஷாவுக்கும், பெங்களூருவில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அல்சூர்கேட் போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆதித்யா ராவின் புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங்களில் வெளியானதாலும், தனது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருவது பற்றி அறிந்ததும் போலீசார் முன்பு ஆதித்யா ராவ் சரண் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் கைது செய்யப்பட்டு இருப்பதை பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடுவும் உறுதி செய்தார்.

இதுகுறித்து அவர் நேற்று காலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஒப்புக் கொண்டுள்ளார்

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதித்யா ராவ் மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீசார் முன் சரண் அடைந்துள்ளார். அவரை அல்சூர்கேட் போலீசார் கைது செய்துள்ளனர். காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரிடம் நான் தான் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஒப்புக் கொண்டு இருப்பதுடன், அதற்கு தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் ஆதித்யா ராவ் தெரிவித்துள்ளார். அவரிடம் பெங்களூரு போலீசார் எந்த விதமான விசாரணையும் நடத்தவில்லை. இந்த வழக்கு தொடர்பாக மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனால் மங்களூரு போலீசாரிடம் கைதான ஆதித்யா ராவ் ஒப்படைக்கப்படுவார். விசாரணைக்கு பின்பு தான் என்ன காரணத்திற்காக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்தார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரியவரும். அவர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மங்களூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேத்தன்சிங் ராத்தோடு கூறினார்.

மங்களூரு போலீசாரிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில், பெங்களூருவில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ள ஆதித்யாராவ் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் பெல்லியப்பா தலைமையிலான போலீசார், விமானம் மூலம் நேற்று மதியம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக ஆதித்யா ராவை விமான நிலையத்தில் வைத்தே மங்களூரு போலீசாரிடம் ஒப்படைப்பதா? அல்லது அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வைத்து ஒப்படைப்பதா? என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் வைத்து ஆதித்யா ராவை மங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக தனியார் மருத்துவமனையில் ஆதித்யா ராவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் ஆதித்யா ராவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மங்களூருவுக்கு சென்று விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, அவரை பலத்த பாதுகாப்புடன் மங்களூருவுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

தீவிர விசாரணை

இந்த நிலையில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைத்து கைதாகி உள்ள ஆதித்யா ராவ் என்ஜினீயர் மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கும், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். சிக்பள்ளாப்பூர் சிறையில் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்திருந்தார். மேலும் கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் உள்ள ஓட்டலில் அவர் வேலை செய்துள்ளார். ஆனால் அவருக்கு வெடிபொருள் எப்படி கிடைத்தது? அந்த வெடிகுண்டுவை அவர் எப்படி தயாரித்தார்?, அதற்காக யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுப்பது, சிறு, சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததுடன், தற்போது விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்ததும் தொியவந்துள்ளது. ஆதித்யா ராவ் மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும், என்ன காரணத்திற்காக மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுவை வைத்தார்?, இந்த சம்பவத்திற்கு பின்னால் யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் கைதான ஆதித்யா ராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் என்ஜினீயர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஆதித்யா ராவ் போலீசில் சரண் அடைந்தது எப்படி?

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதித்யா ராவ் நேற்று காலை 8.30 மணியளவில் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர், யாரை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே டி.ஜி.பி. நீலமணி ராஜுவை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பின்னர் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்களுக்கான வருகை பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதும்படி போலீஸ்காரர் ஆதித்யா ராவிடம் கூறியுள்ளார்.

அப்போது தனது பெயர் ஆதித்யா ராவ் என்றும், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தது நான் தான், அதுதொடர்பாக டி.ஜி.பி. முன்னிலையில் சரண் அடைய வந்திருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு விரைந்து வந்த அல்சூர்கேட் போலீசார் ஆதித்யா ராவை கைது செய்திருந்தனர்.


யூ-டியூப் செயலியில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்தார்

பெங்களூருவில் கைதாகி உள்ள ஆதித்யா ராவ், கடந்த ஒரு மாதமாக மங்களூருவில் இருக்கும் பிரபல ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஓட்டல் அருகேயே அறை எடுத்து அவர் தங்கி இருந்துள்ளார். அப்போது ஆன்லைன் மூலமாக வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். சில நேரத்தில் ஓட்டலுக்கு வந்து அந்த பொருட்களை விற்பனை பிரதிநிதிகள் கொடுத்து சென்றதும் தெரியவந்துள்ளது. ஓட்டலுக்கு வரும் போது எப்போதும் ஒரு பையை அவர் எடுத்து வந்துள்ளார். அந்த பையை தனது காலுக்கு அடியில் வைத்திருந்ததாகவும், அதற்குள் தான் வெடிகுண்டுவை அவர் வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்த பின்பு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஆதித்யா ராவ் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது யூ-டியூப் மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது எப்படி? என்பதை அறிந்து கொண்டுள்ளார். அதன்மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வெடிகுண்டு தயாரித்ததும், வெடிகுண்டு தயாரித்த போது அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்