பழங்குடியின குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - மனுநீதி நாள்முகாமில் கலெக்டர் பேச்சு
பழங்குடியினர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூப்பர்காடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்கள் உதவித்தொகை என 10 பேருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறுவதற்கான ஆணை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 2 பேருக்கு ரூ.55 ஆயிரத்திற்கான காசோலை என நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மக்களுக்காக பல திட்டங்களை தீட்டி பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், பழங்குடியின மக்கள் குறைந்த அளவில் பயனடைகின்றனர். முகாமில் பழங்குடியினர் ஒருங்கிணைந்து அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும். முக்கியமாக சிறு கிராமங்களில் தான் அதிக குறைகள் இருப்பதாக அறிந்து, இனிவரும் காலங்களில் குறைகள் அதிகமாக உள்ள பழங்குடியினர் கிராமங்களில் தான் மனுநீதி நாள் முகாம் அதிகம் நடத்தப்பட வேண்டும். மூப்பர்காடு கிராமத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து கொடுத்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் தங்களது ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொண்டு தவறாமல் எடை எடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துணவு மாவினை தவறாமல் வாங்கி உண்ண வேண்டும். பழங்குடியினர்கள் தங்களின் குழந்தைகளை தவறாமல் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் அனைவரும் இயற்கை வேளாண் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடத்தை முறையாக பயன்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். முகாமில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குருசந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.